லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது ஆர்சனல் குழு.
செவ்வாய்க்கிழமை பின்னிரவு நடந்த நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றிபெற்றது.
கடந்த சில வாரங்களாக புள்ளிகளைக் குவிக்கத்தவறிய ஆர்சனல் தற்போது தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு அருகே வந்துள்ளது.
ஆட்டத்தின் 65வது நிமிடத்திலும் 72வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தியது ஆர்சனல்.
இருப்பினும் ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் கவனக்குறைவாக ஆர்சனல் செயல்பட்டதால் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிக்கு முதல் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட ஆர்சனல், ஃபாரஸ்ட் அணியை கட்டுக்குள் வைத்து வெற்றியை தன் வசப்படுத்தியது.
பிப்ரவரி 5ஆம் தேதி ஆர்சனல் குழு லிவர்பூல் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற ஆர்சனல் போராடக்கூடும்.
புதன்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் குழு 48 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 46 புள்ளிகளுடன் ஆர்சனல் இரண்டாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 43 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளது. ஆஸ்டன் வில்லா நான்காவது இடத்தில் நீடிக்கிறது.