லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் செல்சியை 4-1 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது லிவர்பூல்.
டியோகோ ஜோட்டா, கானர் பிராட்லி, டோமினிக் ஷொபொஸ்லாய், லூயிஸ் டியாஸ் ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர். கிறிஸ்டஃபர் நுங்கு செல்சியின் கோலைப் போட்டார்.
லிவர்பூலின் ஒரு கோலைப் போட்டதுடன் மற்ற மூன்றில் இரண்டை உருவாக்கினார் 20 வயது வீரரான பிராட்லி. ஆட்டத்தில் லிவர்பூல் ரசிகர்கள் அவரின் பெயரைக் கூறி உற்சாகப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
முதன்முறையாக லிவர்பூலுக்கு கோல் போட்டார் பிராட்லி.
தனது குழுவின் விளையாட்டு மிகச் சிறப்பாக இருந்ததென லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் பாராட்டிப் பேசினார்.
“தனிப்பட்ட விளையாட்டாளர்கள் ஒன்றுபட்டு செயல்படாவிட்டால் குழு மிகச் சிறப்பாக விளையாட வாய்ப்பில்லை,” என்று பிபிசி ஊடகத்திடம் கூறினார் கிளோப்.
“ஆட்டத்தின் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினோம். நாங்கள் எதிரணியை வெளுத்துவாங்கினோம். மிகச் சிறப்பாக ஆடினோம். ஆட்டம் அருமையாக அமைந்தது.
“மேலும் சில கோல்களை நாங்கள் போட்டிருக்கலாம், போட்டிருக்கவேண்டும். அபாரமாக விளையாடாவிட்டால் செல்சிக்கு எதிராக ஐந்து, ஆறு கோல்களைப் போட முடியாது,” என்று குறிப்பிட்டார் கிளோப்.
வியாழக்கிழமை (1 பிப்ரவரி) அதிகாலை நடந்த மற்ற இரண்டு பிரிமியர் லீக் ஆட்டங்களில் பர்ன்லியை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் சிட்டி, பிரென்ட்ஸ்ஃபர்டை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.