தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றியைப் பறித்த தென்கொரியா

தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றியைப் பறித்த தென்கொரியா

1 mins read
6506abbf-829b-4ac3-81ff-3e3e2f7fe9c1
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் வெற்றி கோலைப் போடும் தென்கொரியாவின் சொன் (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

அல் வாக்ரா: ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் தோல்வியடையும் நிலையிலிருந்து மீண்டுவந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தென்கொரியா.

ஆஸ்திரேலியாவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது தென்கொரியா.

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கிரேய்க் குட்வின் ஆஸ்திரேலியாவை முன்னுக்கு அனுப்பினார். அந்த அணி வெல்லும் நிலையில் இருந்தபோது கடைசி சில நிமிடங்களில் தென்கொரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கினார் ஹுவாங் ஹீ-சான்.

வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. 104வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் தென்கொரிய நட்சத்திரம் சொன் ஹியோங்-மின்.

வேட்கையுடன் விளையாடி வென்றது தென்கொரியா. இந்த வெற்றியைத் தொடர்ந்து அந்த அணி 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லக்கூடும் என்ற உணர்வு தலைதூக்கியுள்ளது.

தனது அணியின் தோல்வியால் தான் சீர்குலைந்து போனதாகக் கூறினார் ஆஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஆர்னோல்ட். கிடைத்த கோல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளாததால் ஆஸ்திரேலியா பின்விளைவைச் சந்தித்ததாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

“நாங்கள் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தோம். கோல் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்றாக அதிகரிக்க எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாததால் விளைவைச் சந்திக்க நேர்ந்தது,” என்றார் ஆர்னோல்ட்.

“கோல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது அந்தந்த விளையாட்டாளர்களின் பொறுப்பு,” என்றும் அவர் சுட்டினார்.

ஆசிய கிண்ணப் போட்டியின் மற்றொரு காலிறுதியாட்டத்தில் தஜிகிஸ்தானை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது ஜோர்தான்.

குறிப்புச் சொற்கள்