நியூகாசல்: லியூட்டன் டவுனும் நியூகாசல் யுனைடெட்டும் மோதிய விறுவிறுப்பான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் 4-4 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் முன்னுக்குச் சென்ற நியூகாசல் 62வது நிமிடத்துக்குள் எதிர்பாரா விதமாக 4-2 எனும் கோல் கணக்கில் தோற்றுக்கொண்டிருந்தது. ஆனால் 67, 73வது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு அக்குழு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.
நியூகாசலின் முதல் இரண்டு கோல்களை ஷான் லோங்ஸ்டாஃப் போட்டார். கியரன் ட்ரிப்பியர், ஹார்வி பார்ன்ஸ் ஆகியோர் அக்குழுவின் மற்ற இரண்டு கோல்களைப் போட்டனர்.
கேப்ரியல் ஓஷோ, ராஸ் பார்க்லி, கார்ல்ட்டன் மோரிஸ், எலிஷா அடெபயோ ஆகியோர் லியூட்டனின் கோல்களைப் போட்டனர்.
சனிக்கிழமை (3 பிப்ரவரி) நடைபெற்ற மற்றொரு விறுவிறுப்பான பிரிமியர் லீக் ஆட்டத்தில் எவர்ட்டனும் டோட்டன்ஹம் ஹாஸ்பரும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.
முன்னாள் எவர்ட்டன் நட்சத்திரமான ரிச்சார்லிசன் நான்காவது நிமிடத்தில் ஸ்பர்சை முன்னுக்கு அனுப்பினார். 30வது நிமிடத்தில் எவர்ட்டனின் ஜாக் ஹேரிசன் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
41வது நிமிடத்தில் மறுபடியும் கோல் போட்டு ஸ்பர்சை முன்னுக்கு அனுப்பினார் ரிச்சார்லிசன். ஆட்டம் முடிய ஓரிரு நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் ஜாரட் பிராந்த்வெய்ட் கோல் போட்டு எவர்ட்டனை மீட்டார்.

