லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லிவர்பூலை 3-1 எனும் கோல் கணக்கில் வென்று தனது ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது ஆர்சனல்.
ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் புக்காயோ சாக்கா ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார். பின்னர் முற்பாதியாட்டம் முடிவடையும் தறுவாயில் கேப்ரியல் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் லிவர்பூல் சமநிலை கண்டது.
எனினும், கேப்ரியல் மார்ட்டினெல்லி 67வது நிமிடத்திலும் லியாண்ட்ரோ ட்ரொசார்ட் 92வது நிமிடத்திலும் கோல் போட்டதையைத் தொடர்ந்து வெற்றிபெற்றது ஆர்சனல். இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக் விருதை வெல்லக்கூடும் என்ற நம்பிக்கையை ஆர்சனல் மீட்டெடுத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் லிவர்பூல் எதிர்பாரா விதமாகக் களையிழந்து காணப்பட்டது. பொதுவாக நம்பகரமான வீரர்கள் எனக் கருதப்படும் வெர்ஜில் வேன் டைக், அலிசன் போன்ற அக்குழுவின் நட்சத்திரங்கள் செய்த தவறுகளை ஆர்சனல் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது.
எனினும், தனது விளையாட்டாளர்கள் யாரைப் பற்றியும் குறைகூறத் தயாராய் இல்லை என்றார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
“ஆட்டத்தில் நாங்கள் தொடர்ந்து மேம்பட்டு வந்தோம். பிற்பாதியில் நாங்கள் சிறப்பாக விளையாடிய தருணங்கள் இருந்தன. ஆனால் அதற்குப் பிறகு இரண்டாவது கோலை விட்டுக்கொடுத்தோம்,” என்ற கிளோப், “அது நிலைமையை மோசமாக்கியது. எங்கள் வீரர்கள் மனிதர்கள்தான் என்பதையே அது காட்டுகிறது,” என்றும் குறிப்பிட்டார்.