இளம் வீரர்களால் புதுப்பொலிவு பெற்ற மான்செஸ்டர் யுனைடெட்

1 mins read
623f9d19-973f-49db-99ba-4d47118fd066
மான்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றியைக் கொண்டாடும் இளம் வீரர்கள் ஹோய்லண்ட், கர்னாச்சோ, மெய்னூ (இடமிருந்து). - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் யுனைடெட்.

அலெஹாண்ட்ரோ கர்னாச்சோ, மான்செஸ்டர் யுனைடெட்டின் இரண்டு கோல்களைப் போட்டார். மற்றொரு கோலைப் போட்டவர் ராஸ்முஸ் ஹோய்லண்ட்.

இளம் வீரர்களான கர்னாச்சோ, ஹோய்லண்ட், கோபி மெய்னூ ஆகியோர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மூவரும் கைகோத்து மான்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றியைக் கொண்டாடும் படம் சமூக ஊடகங்களில் பிரபலமானது.

அவர்கள் மீது தான் வைத்த நம்பிக்கை கைகொடுத்ததாகக் கூறினார் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

“நீங்கள் என்னை நம்பவில்லை,” என்று ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசினார் டென் ஹாக். “வருங்காலத்தைக் கருத்தில்கொண்டே சென்ற ஆண்டு நடுப்பகுதியில் நாங்கள் விளையாட்டாளர்களை வாங்கினோம். குழுவில் இருந்த விளையாட்டாளர்களில் கர்னாச்சோ, மெய்னூ போன்ற வாய்ப்பு தரப்படவேண்டியோரைக் களமிறக்கிறோம். ஹோய்லண்டும் முன்னேறி வருகிறார்.

“நம்மிடம் இருக்கும் தாக்குதல் ஆட்டக்காரர்கள் எந்தக் குழுவுக்கும் பிரச்சினை தரக்கூடியவர்கள், அனுபவித்து காற்பந்து விளையாடுபவர்கள். அந்த மூன்று இளம் வீரர்களும் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர். இது ஒரு விளையாட்டாளரைப் பற்றியது அல்ல, ஒரு குழுவின் தரமான விளையாட்டைப் பற்றியதாகும். 11 விளையாட்டாளர்களும் தற்காப்பு ஆட்டத்திலும் தாக்குதல் ஆட்டத்திலும் ஈடுபட்டனர். பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது,” என்று பெருமைபட்டார் டென் ஹாக்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்