லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 6-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஆர்சனல்.
முற்பாதியாட்டம் நிறைவடையும்போதே ஆர்சனல் நான்கு கோல் வித்தியாசத்தில் முன்னணி வகித்தது. பிற்பாதியாட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் விழுந்தன.
வில்லியம் சலிபா, புக்காயோ சாக்கா, கேப்ரியல், லியாண்ட்ரோ ட்ரொசார்ட், டெக்லன் ரைஸ் ஆகியோர் கோல்களைப் போட்டனர். இரண்டு கோல்களைப் போட்டார் சாக்கா.
தனது குழு வெஸ்ட் ஹேமை அதிர வைக்கும் என்று உள்ளுணர்வு தன்னிடம் இருந்ததாகக் கூறினார் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்டெட்டா. வெஸ்ட் ஹேமுக்கு எதிரான கடந்த இரண்டு ஆட்டங்களில் ஆர்சனல் தோல்வியடைந்தது.
“அந்த வெறி எங்களிடம் இருந்தது. இந்த ஆட்டம் சவாலானதாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். எல்லா வகையிலும் முந்தைய ஆட்டத்தில் விளையாடியதைவிட இந்த ஆட்டத்தில் மேலும் சிறப்பாக ஆட வேண்டியிருந்தது. அதை இன்று நாம் செய்தோம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (11 பிப்ரவரி) நடந்த ஆட்டத்திற்குப் பிறகு சொன்னார் அர்டெட்டா.
லீக் பட்டியலில் ஆர்சனல் மூன்றாவது இடத்தில் உள்ளது.