பர்மிங்ஹம்: ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது மான்செஸ்டர் யுனைடெட்.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ராஸ்முஸ் ஹோய்லண்ட் யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினார். 67வது நிமிடத்தில் வில்லாவின் டக்லஸ் லூயிஸ் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஸ்காட் மெக்டொமினே 86வது நிமிடத்தில் யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்டார். இந்தப் பருவம் பல ஆட்டங்களில் மாற்று ஆட்டக்காரராக வந்து யுனைடெட்டின் தலையெழுத்தை மாற்றியிருக்கிறார் மெக்டொமினே.
லீக்கில் கடந்த மூன்று ஆட்டங்களில் யுனைடெட் வெற்றிபெற்றுள்ளது.
லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள வில்லா இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் நான்காம் இடத்திற்கு முன்னேறியிருக்கும். ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வில்லாவுக்குப் பின்னால் உள்ள யுனைடெட் ஆறாம் இடத்தை வகிக்கிறது.

