ஜகார்த்தா: காற்பந்துப் போட்டியின்போது திடலில் மின்னல் தாக்கி காற்பந்து வீரர் ஒருவர் திடலின் நடுவிலேயே உயிரிழந்த சோக சம்பவம், இந்தோனீசியாவில் நிகழ்ந்துள்ளது.
இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா, பாண்டுங்கில் உள்ள சினிவாங்கி விளையாட்டரங்கில் ஃபுளோ பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் அணிகளுக்கு இடையே காற்பந்துப் போட்டி பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டி நடந்துகொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணிக்கு செப்டென் ரஹார்ஜா எனும் காற்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார். மின்னல் தாக்கிய பிறகும் அவர் சுவாசித்துக்கொண்டிருந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனையை அடையும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கியதன் காரணமாக காற்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்தது சக வீரர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. காற்பந்து வீரரை மின்னல் தாக்கும் காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.
அதன் பிறகு இந்தோனீசியாவில் நடைபெற்ற ஆட்டங்களின்போது, போட்டியிட்ட குழுக்கள் மறைந்த அந்தக் காற்பந்து வீரருக்கு மௌன அஞ்சலி செலுத்தின.
காற்பந்துப் போட்டியின்போது இதுபோன்ற சோகமான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரேசிலின் காற்பந்துத் திடலில் நடந்த ஒரு போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 21 வயது வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
ஆகஸ்ட் 2022ல், ஜார்க்கண்டின் கோமியா மாவட்டத்தில் உள்ள ஹசாரி கிராமத்தில் காற்பந்துப் போட்டியின்போது 19 வயது இளைஞர் மின்னல் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

