சௌராஷ்டிரா: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. அதனால், இரண்டாவது போட்டியில் அவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நூறு விழுக்காடு உடல் தகுதி பெறவில்லை என்பதால் முழுமையாகக் குணமடைவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
23 வயதான இடக்கை பந்தடிப்பாளரான தேவ்தத் படிக்கல், ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கெதிராக 193 ஓட்டங்களும், கோவா அணிக்கு எதிராக 103 ஓட்டங்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 ஓட்டங்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.