சோல்: ஆசிய கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியா தோல்வியுற்று வெளியேறியது.
இதையடுத்து, கிளின்ஸ்மன் தலைமைத்துவத்துக்கு எதிராக விமர்சனம் எழுந்தது. இதனால், தென்கொரிய காற்பந்து சங்கம் அதன் பயிற்றுவிப்பாளர் யர்கன் கிளின்ஸ்மன்னை பதவியிலிருந்து விலக்கியுள்ளது.
தென்கொரியாவின் காற்பந்து சங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் தேசிய குழு நிர்வாகம் திரு கிளின்ஸ்மன்னை பதவியில் இருந்து விலக்குமாறு வியாழக்கிழமை அறிவுறுத்தியது. இதன் தொடர்பில் அவரை பதவியிலிருந்து விலக்குவதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும் காற்பந்துக் குழுவை தலைமை ஏற்று நடத்தும் திறன் அவருக்கு உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளதாகவும் அது தெரிவித்தது.
ஆசிய கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதியில் ஜோர்தானிடம் தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து காற்பந்து ரசிகர்களும் சில அரசியல்வாதிகளும் 59 வயது கிளின்ஸ்மன்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுந்தது.
இது பற்றிக் கருத்துரைத்த காற்பந்து சங்கத் தலைவர் சுங் மோங் யு திரு கிளின்ஸ்மன் தலைமை ஏற்ற காலம் தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக அமையவில்லை என்று தெரிவித்தார்
“காற்பந்து ஆட்டங்களை சரிவர நிர்வகிப்பது, காற்பந்து வீரர்களை கையாள்வது, வீரர்களுக்கு தலைமையேற்று காற்பந்துக் குழுவின் போட்டித்தன்மையை மேல்நிலைக்கு கொண்டு செல்வது போன்றவற்றில் கிளின்ஸ்மன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை,” என்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.

