மான்செஸ்டர்: செல்சிக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியைத் தோல்வியின் விளிம்பிலிருந்து மீட்டார் ரொட்ரி.
சனிக்கிழமை (17 பிப்ரவரி) ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் செல்சி, 1-0 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தது. அப்போது கோல் போட்டார் சிட்டியின் ரொட்ரி.
சிட்டி, கடந்த 15 மாதங்களாக சொந்த மண்ணில் தோல்வியடையவில்லை. இந்த ஆட்டத்துடன் அந்த வெற்றிப் பயணம் முடிவுக்கு வரும்போல் தெரிந்தது. அதிலிருந்து தனது குழுவைக் காப்பாற்றினார் ரொட்ரி.
கடந்த ஒன்பது லீக் ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்து வந்துள்ளது லீக்கின் நடப்பு வெற்றியாளரான சிட்டி. அக்குழு லீக் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆர்சனல் பர்ன்லியை 5-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது. கடந்த சில வாரங்களாக அபாரமாக விளையாடி வந்துள்ளது ஆர்சனல்.
சென்ற வாரம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அக்குழு, வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 6-0 எனும் கோல் கணக்கில் துவைத்தெடுத்தது.