மான்செஸ்டர்: முன்னாள் மான்செஸ்டர் சிட்டி காற்பாந்துக் குழுவின் விளையாட்டாளரான கேல்வின் ஃபிலிப்ஸ் உடல் பருமனாக இருந்ததாகக் கூறியதற்கு அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார் ஃபிலிப்ஸ். அப்போட்டியிலிருந்து மீண்டும் சிட்டிக்குத் திரும்பி வந்த பிறகு பயிற்சிகளில் பங்கேற்கும் நிலையில் அவரின் உடல் இல்லை என்று கார்டியோலா கூறியிருந்தார்.
2022 உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டு ஆட்டங்களில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஃபிலிப்ஸ், மொத்தமாக 40 நிமிடங்களுக்கு மட்டுமே விளையாடினார்.
2022ஆம் ஆண்டில் ஃபிலிப்ஸ் லீட்ஸ் யுனைடெட்டிலிருந்து சிட்டியில் சேர்ந்தார். சிட்டியில் இருந்த 18 மாதங்களில் அவர் ஆறு ஆட்டங்களில் மட்டுமே தொடக்கத்திலிருந்து விளையாடினார்.
சென்ற மாதம் இரவல் ஒப்பந்தத்தின்கீழ் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் சேர்ந்தார் ஃபிலிப்ஸ். அதனைத் தொடர்ந்து கார்டியோலாவின் வார்த்தைகள் தனது தன்னம்பிக்கையைப் பெரிய அளவில் பாதித்ததாக அவர் கூறினார்.
“அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு விமர்சனம் செய்வதற்கு முன்பு நான் அவரிடம் பேசியிருந்தேன். என்றுமே குழுவிடம் அல்லது இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விளையாட்டாளரிடம் பேசாமல் ஒரு கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கமாட்டேன்,” என்று திங்கட்கிழமையன்று (19 பிப்ரவரி) செய்தியாளர்களிடம் சொன்னார் கார்டியோலா.