மான்செஸ்டர்: பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் சிட்டி.
ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார் சிட்டியின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் கோல் விழுந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக் பட்டியலில் சிட்டி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் சிட்டிக்குப் பின்னால் மூன்றாம் இடத்தில் உள்ளது ஆர்சனல்.
முதலிடம் வகிக்கிறது லிவர்பூல்.
சென்ற வாரம் நடைபெற்ற செல்சிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹாலண்ட் பல கோல் வாய்ப்புகளை நழுவவிட்டார். அந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து ஹாலண்ட் எதிர்மறையான விமர்சனத்துக்கு ஆளானார். பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலைப் போட்டதன் மூலம் ஹாலண்ட், விமர்சித்தோரின் வாயை அடைத்ததாகச் சொன்னார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.
இரண்டு மாதங்களாகக் காயமுற்றிருந்த ஹாலண்ட் அண்மையில்தான் குணமடைந்து மீண்டும் விளையாடத் தொடங்கினார். மேலும், தனது பாட்டி இறந்த துக்கத்தையும் அவர் எதிர்கொண்டு வருவதாகக் கூறினார் கார்டியோலா.