மான்செஸ்டர்: பிரிட்டிஷ் செல்வந்தர் ஜிம் ராட்கிலிஃப், இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் இணை உரிமையாளராவது செவ்வாய்க்கிழமையன்று (20 பிப்ரவரி) உறுதியானது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் நிர்வாகமும் இங்கிலாந்து காற்பந்துச் சங்கமும் திரு ராட்கிலிஃப், யுனைடெட்டில் சிறுபான்மை பங்குகளை வாங்க சென்ற வாரம் ஒப்புதல் வழங்கின. அதனையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை அக்குழுவின் 25 விழுக்காட்டுப் பங்குகளை வாங்கி முடித்தார்.
அவர் வாங்கிய பங்குகளின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் பவுண்ட் (1.73 பில்லியன் வெள்ளி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வயது ராட்கிலிஃப், யுனைடெட்டின் காற்பந்து விவகாரங்களை நிர்வகிப்பார்.
அவர் யுனைடெட்டில் சிறுபான்மை பங்குகளை வாங்கவிருப்பதாக சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
யுனைடெட்டின் இணை உரிமையாளராவது தமக்கு மிகுந்த பெருமை தருவதாகக் கூறியுள்ளார் திரு ராட்கிலிஃப். அது தமக்கான பெரிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுனைடெட்டின் பெரும்பான்மை பங்குதாரர்கள் அமெரிக்க செல்வந்தர்களான கிளேஸர் குடும்பமாகும். ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு அதிக ஆதரவு கிடையாது.
திரு ராட்கிலிஃபின் வருகை பல ஆண்டுகளாகக் களையிழந்து போயிருக்கும் யுனைடெட்டுக்குப் புத்துயிர் தரும் என்ற நம்பிக்கை பலரிடையே உள்ளது.