லண்டன்: செல்சி அணிக்கு எதிரான லீக் கிண்ணத்தின் இறுதியாட்டத்தில் லிவர்பூல் குழு வாகை சூடியது.
பரபரப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறின. 90 நிமிடங்கள் கடந்த பிறகு, ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
ஆட்டத்தின் 118வது நிமிடத்தில் லிவர்பூல் அணித் தலைவர் வேன் டைக் அசத்தலாக கோல் அடித்து அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.
தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் லிவர்பூல், எஃப்ஏ கிண்ணம், யூரோப்பா லீக் கிண்ணத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
“கரபாவ் கிண்ணத்தை வென்றது மகிழ்ச்சி தருகிறது. நம்ப முடியாத அளவில் லிவர்பூல் விளையாடி வருகிறது. இந்த வெற்றியில் எனக்கும் ஒரு பங்கு இருப்பது பெருமை தருகிறது,” என்றார் லிவர்பூல் அணி நிர்வாகி யர்கன் கிளோப்.
கிளோப் இந்தப் பருவத்துடன் லிவர்பூல் அணியில் இருந்து விலகுகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக லிவர்பூல் அணியைத் திறமையாக வழிநடத்தி பல கிண்ணங்களை வென்றார் கிளோப்.