ரோம்: டெஸ்டஸ்டரோன் என்ற ஊக்க மருந்து உட்கொண்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் போக்பாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஜுவென்டஸ் காற்பந்து வீரர் பால் போக்பாவுக்கு தற்பொழுது காற்பந்து விளையாட நான்காண்டு தடை விதித்துள்ளது இத்தாலியின் போதைப் பொருளுக்கு எதிரான தீர்ப்பாயம்.
இந்த முடிவு தமது குழுவுக்கு பிப்ரவரி 29ஆம் தேதி தெரிவிக்கப்பட்டதாக ஜுவென்டஸ் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். திரு போக்பா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து காற்பந்து விளையாடுவதில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதனால், போக்பாவின் காற்பந்து விளையாடும் நாள்கள் முடிவுக்கு வந்துவிடும் அபாயம் உள்ளது என்று கூறப்படும் நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக தாம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக போக்பா தெரிவித்துள்ளார்.
“எனது காற்பந்து விளையாட்டில் நான் சாதித்ததெல்லாம் என்னிடம் இருந்து பறிக்கப்படுவதால் நான் கவலை, அதிர்ச்சி, மனமுடைந்து போய் இருக்கிறேன்,” என்று தமது இன்ஸ்டகிராம் பதிவில் பால் போக்பா கூறியுள்ளார்.

