தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்டில் சாதிக்கும் தாய்-மகள்

2 mins read
தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை அடுத்த தலைமுறைக்கு வழங்க உழைக்கும் பெண்மணி
a33f5d8d-e747-4d07-83aa-44c544d20cad
அண்மைய ‘ஏசிசி’ பெண்கள் பிரிமியர் கிண்ணம் 2024ல் விளையாடிய ‘சன்பர்ட்ஸ்’ சிங்கப்பூர் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியினர். - படம்: சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம்

வித்யாவிற்கு கிரிக்கெட் விளையாட பெரும் ஆர்வம். ஆனால், இந்தியாவில் சிறுவயதில் அவர் விளையாடியபோது பெண்களுக்கெனத் தனி அணி, போட்டிகள் இல்லை.

“உன்னால் ஆண்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாது’ எனப் பலரும் கூறினர். ஓரிரண்டு பந்துகள்தான் ஆட வாய்ப்பளிப்பார்கள்,” என நினைவுகூர்கிறார் 38 வயது வித்யா பிரகாஸ்.

அன்று தனக்கு இல்லாத வாய்ப்புகள் இன்றைய பெண்களுக்கு வழங்கும் முனைப்புடன் இவ்வாண்டு ஜனவரி முதல் சிங்கப்பூர் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி மேலாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

கிரிக்கெட் விளையாட சிங்கப்பூரில் கூடுதல் பெண்கள் முன்வரவேண்டும்.
வித்யா பிரகாஸ்

“கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளோருக்கு தேசிய பெண்கள் கிரிக்கெட் செயல்திட்டம் கைகொடுக்கிறது.” என்கிறார் வித்யா.

இத்திட்டத்தின்வழி, சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (எஸ்என்சிஏ) பயிற்சிக்கு சேர்ந்து, தேசிய வளர்ச்சி அணிக்கு முன்னேறி, பின்பு தேசிய ‘இலிட்’ அணியில் சேரலாம். இந்த அணியிலிருந்துதான் அனைத்துலகப் போட்டிகளுக்கான தேசிய அணி தேர்ந்தெடுக்கப்படுகிறது.

“எஸ்என்சிஏவில் எங்கள் ஆக இளைய விளையாட்டாளருக்கு வெறும் ஆறரை வயதுதான். 13 வயதிலிருந்தே U-19 அணியிலும் 15 வயதிலிருந்தே டி20 அனைத்துலகப் போட்டிகளிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கலாம்.” என்கிறார் வித்யா.

வித்யாவின் 17 வயது மகள் த்வனி, ஈராண்டுகளுக்கு முன்னர் 2022 சவ்தாரி கிண்ணப் போட்டியில் மலேசியாவிற்கு எதிராக முதன்முறையாக சிங்கப்பூரை கிரிக்கெட்டில் பிரதிநிதித்தார்.

வித்யா பிரகாஸ் (வலம்), த்வனி பிரகாஸ்.
வித்யா பிரகாஸ் (வலம்), த்வனி பிரகாஸ். - படம்: வித்யா பிரகாஸ்

அவரது திறனைக் கண்டறிந்த தேசிய பெண்கள் அணியின் பயிற்றுவிப்பாளர் சமால், மகளிர் கிரிக்கெட் சிங்கப்பூரில் வளர்பிறையில் இருப்பதாகக் கருதுகிறார்.

“2019ல் உலகின் 46 அணிகளில் 46வது நிலையில் இருந்தோம். இன்று உலகின் 66 அணிகளில் 46வது நிலையில் இருக்கிறோம். இன்று சிங்கப்பூரில் 370க்கும் மேற்பட்ட பெண் கிரிக்கெட் விளையாட்டாளர்கள் விளையாடுகின்றனர்,” என்கிறார் திரு சமால்.

2020ல் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் தொடங்கிய ‘எஸ்என்சிஏ பிஎச்எஃப்’ உபகாரச் சம்பளம், திறன்மிக்க பெண்களுக்கு ஆண்டுதோறும் S$2,500 மதிப்பிலான இலவச பயிற்சி வழங்குகிறது.

ஆதரவற்றோருக்கான இல்லங்கள், சிறப்புத் தேவை உடையோருக்கான பள்ளிகள், வசதி குறைந்த குடும்பங்கள் ஆகியவற்றிலும் திறன்மிக்க விளையாட்டாளர்களை சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் கண்டறிந்து வருகிறது.

மார்ச் 6ஆம் தேதி, நார்த்லைட் பள்ளிக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.
மார்ச் 6ஆம் தேதி, நார்த்லைட் பள்ளிக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. - படம்: சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம்

“நம் பெண் விளையாட்டாளர்கள் பள்ளி, வேலைக்குப் பின்னர் வாரநாள் இரவுகளிலும் வார இறுதிகளிலும் வாரத்திற்கு நான்கு முறை பயிற்சி செய்கின்றனர்.

“ஒரு நாள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவோம் என்பதே என் கனவு,” என்கிறார் திரு சமால்.

குறிப்புச் சொற்கள்