தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அணி டெஸ்ட் போட்டி வீரர்களின் ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தியது பிசிசிஐ

2 mins read
c91390a1-b1a3-4f73-b084-b2474412c623
படம்: - இந்திய ஊடகம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் போட்டிக்கான ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (படம்) தனது எக்ஸ் வலைதளப் பதிவில்,“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வீரர்களின் நிலையான வருவாய்க்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம். 2022-23 பருவம் முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். போட்டி ஊதியத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்,” என தெரிவித்துள்ளார்.

அதன்படி உதாரணமாக ஒரு பருவத்தில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் இதில் 4 போட்டிகளுக்கு குறைந்த அளவில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாது.

50 விழுக்காட்டுக்கு மேல் என்ற அளவில் 5 முதல் 6 போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஓர் ஆட்டத்துக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். விளையாடும் 11 வீரர்கள் கொண்ட குழுவில் இடம் பெறாத வீரர்களுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத் தொகை கிடைக்கும். அதேவேளையில் 7 அல்லது அதற்கு அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு போட்டி ஒன்றுக்கு ரூ.45 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். விளையாடும் 11 வீரர்கள் கொண்ட குழுவில் இடம்பெறாத வீரர் ஊக்கத் தொகையாக ரூ.22.50 லட்சம் பெறுவார்.

இந்த கணக்கீடுகளின்படி கேப்டன் ரோகித் சர்மா 2023-24 பருவத்தில் இந்திய அணி விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த வகையில் அவர், ஊதியமாக ஓர் ஆட்டத்துக்கு ரூ.15 லட்சம் என்ற கணக்கில் ரூ.1.50 கோடி பெறுவார். இத்துடன் ஊக்கத் தொகையாக ரோகித் சர்மாவுக்கு ரூ.4.5 கோடி வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்