தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏ கிண்ணம்: யுனைடெட் - லிவர்பூல் பலப்பரீட்சை

2 mins read
85852ca5-48b5-46d1-9db0-7ee496f3e0e0
காயத்தால் அவதிபட்டு வந்த யுனைடெட் அணியின் முன்னணி வீரர்கள் லிவர்பூல் அணிக்கு எதிராக களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி அணிகளான லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் எஃப்ஏ கிண்ணத்தின் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளன.

காயத்தால் அவதிபட்டு வந்த யுனைடெட் அணியின் முன்னணி வீரர்கள் லிவர்பூல் அணிக்கு எதிராக களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏரன் வான்-பிசாக்கா, ஹேரி மெக்வாயர், ராஸ்மஸ் ஹோய்லண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டனர். இவர்களின் வருகை மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்கிற்கு பெரிய பலத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.

“காயத்தில் இருந்து சில வீரர்கள் மீண்டுவிட்டனர், பயிற்சி நன்றாக நடந்து வருகிறது, அனைத்தும் நன்றாக இருந்தால் முழு பலத்துடன் அணி களமிறங்கும்,” என்று டென் ஹாக் தெரிவித்துள்ளார்.

பிரிமியர் லீக்கில் வெற்றி தோல்வி என கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யுனைடெட் குழுவுக்கு எஃப்ஏ கிண்ண வெற்றி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதனால் யுனைடெட், லிவர்பூல் அணிக்கு அதிக அளவில் நெருக்கடி கொடுக்கக்கூடும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

மறுபக்கம் லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டியுடனான ஆட்டத்தை சமன் செய்த உற்சாகத்தில் உள்ளது.

அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தி வரும் லிவர்பூல் அணி யுனைடெட் குழுவுக்கு எதிராகவும் அதே பாணியில் விளையாடக்கூடும்.

சில வாரங்களுக்கு முன்னர் லீக் கிண்ணத்தை வென்ற லிவர்பூல் எஃப்ஏ கிண்ணத்திலும் அதன் ஆதிக்கத்தை தொடரக்கூடும்.

ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட்டின் விளையாட்டு அரங்கத்தில் இடம்பெறுவதால் போட்டியில் அனல் பறக்கக்கூடும்.

சிங்கப்பூர் நேரப்படி இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணிக்கு நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:45 மணிக்கு நடக்கும் மற்றொரு எஃப்ஏ கிண்ண காலிறுதி ஆட்டத்தில் செல்சி அணியும் லெஸ்டர் சிட்டி குழுவும் மோதுகின்றன.

இதுவரை மான்செஸ்டர் யுனைடெட் எஃப்ஏ கிண்ணத்தை 12 முறை வென்றுள்ளது. லிவர்பூல் 8 முறை கைப்பற்றியுள்ளது. அதிகபட்சமாக ஆர்சனல் குழு 14 முறை வாகை சூடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்