தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு பந்தடிப்பாளர்கள் அதிரடியாக ஆடுவார்கள்: தினே‌ஷ் கார்த்திக்

2 mins read
d72108c3-0d7b-4807-adee-c5f700ee459d
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஓட்டங்கள் குவித்த தினே‌ஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இணை. - படம்: ஏஎஃப்பி

சென்னை: இவ்வாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மார்ச் 22 வெள்ளிக்கிழமை இரவு நடந்த அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தினே‌ஷ் கார்த்திக்(38), அனுஜ் ராவத் (48) மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்றப் பந்தடிப்பாளர்கள் ஓட்டம் குவிக்கத் தவறினர். 

“அணியில் விராத் கோஹ்லி, டு பிளஸ்ஸி, கிளன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே எதிரணியை நெருக்கடியில் தள்ள வேண்டும் என்று எண்ணினோம். அதனால், பந்தடிப்பாளர்கள் தொடக்கத்தில் இருந்தே ஓட்டங்களைக் குவிக்க அதிரடியாக விளையாடினர்,” என்று தினே‌ஷ் கார்த்திக் தெரிவித்தார்.

இனிவரும் ஆட்டங்களில் பந்தடிப்பாளர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழக்காமல் சீராக ஓட்டங்கள் குவிப்பார்கள் என்று தினே‌ஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்தார்.

முதலில் பந்தடித்த பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டு இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

சிறப்பாகப் பந்துவீசிய சென்னை அணியின் முஸ்தஃபிசூர் ர‌ஹ்மான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவர் 4 ஓவர்களில் 29 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் போட்டி ஒளிபரப்பாளர்களை விமர்சனம் செய்துள்ளார்.

“சென்னை அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்தான். அவரது முகத்தையும் தொலைக்காட்சியில் காட்டுங்கள். ஒளிப்பதிவாளர் டோனியின் முகத்தை மட்டுமே காட்டுகிறார்,” என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்