கடுமையான பார்க்லி நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தை முடித்த முதல் பெண்

கடுமையான பார்க்லி நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தை முடித்த முதல் பெண்

படம்: பிபிசி

24 Mar 2024 - 12:19 pm

2 mins read

நேஷ்வில்: உலகிலேயே மிகக் கடுமையான நெடுந்தொலைவு ஓட்டங்களில் ஒன்றான பார்க்லி நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தை முடித்த முதல் பெண் எனும் பெருமை பிரிட்டிஷ் வீராங்கனை ஜாஸ்மின் பாரிசைச் சேரும்.

மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று இப்பந்தயத்தை 59 மணிநேரம், 58 நிமிடங்கள், 21 வினாடிகளில் பாரிஸ் முடித்து வரலாறு படைத்தார்.

பந்தயத்தை 60 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இதுவரை 20 பேர் மட்டுமே பந்தயத்தை முடித்துள்ளனர்.

இந்தப் பந்தயம் அமெரிக்காவின் டெனஸ்ஸி மாநிலத்தில் நடைபெற்றது.

பந்தயத்தை பாரிஸ் வெற்றிகரமாக முடித்ததை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சமூக ஊடகத்தில் கண்டு களித்தனர்.

பந்தயத்தை முடித்ததும் கடும் களைப்பு காரணமாக அவர் தரையில் சாய்ந்தார்.

60 மணி நேரத்துக்குள் பந்தயத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக விலங்கு மருத்துவரான 40 வயது பாரிஸ், இரவிலும் காடு, மலை எனப் பாராமல் ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதர்களில் இருந்த முட்களால் அவர் கால்களில் கீறல்கள் ஏற்பட்டிருந்தன.

“”பார்க்லி நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் மிகுந்த சவால்மிக்கது. இதில் பங்கேற்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தேன்.

“பந்தயத்தில் ஓடியபோது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதே சமயத்தில் சற்று பதற்றமாகவும் இருந்தது. பந்தயத்தை வெற்றிகரமாக முடிப்பது எளிதன்று என எனக்குத் தெரியும். முடிக்க முடியாமல்கூட போகக்கூடிய சாத்தியம் அதிகம். ஆனால் அந்தச் சவாலை முறியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ஓடினேன்,” என்று பெருமிதத்துடன் கூறினார் பாரிஸ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்