ஐபிஎல்: சென்னையைச் சந்திக்கும் டெல்லி

1 mins read
6c35dd66-8556-481d-9cf5-021c2bf7317a
இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ளது. - படம்: ஏஎஃப்பி

விசாகப்பட்டினம்: இவ்வாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னையின் பந்தடிப்பாளர்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் அந்த அணி பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.

மறுபக்கம், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது.

“ஆட்டத்தின் முதல் 15 ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம், மீதமுள்ள 5 ஓவர்களில் தவறு மேல் தவறு செய்து ஆட்டத்தை இழக்கிறோம். இனிவரும் ஆட்டங்களில் இந்தத் தவறுகளை செய்யாமல் இருப்போம்,” என்றார் டெல்லி அணித் தலைவர் ரி‌ஷப் பன்ட்.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்