பெட்டாலிங் ஜெயா: லண்டன் கிளாசிக் சுவர்ப்பந்துப் போட்டியில் மகளிருக்கான பிரிவின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தினார் மலேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி.
இந்த ஆட்டம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியன்று லண்டனில் உள்ள அலெக்சாண்டிரியா பேலசில் நடைபெற்றது.
உலகச் சுவர்ப்பந்து வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள சிவசங்கரி இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ள எகிப்திய வீராங்கனை ஹானியா எல் ஹமாமியுடன் மோதினார்.
சிறப்பாக விளையாடிய சிவசங்கரி, 11-9, 5-11, 13-11, 12-14, 11-8 எனும் புள்ளிக் கணக்கில் வாகை சூடினார்.
இரு வீராங்கனைகளும் தரப்புக்கு இரண்டு சுற்றுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்க கடைசி சுற்று விளையாடப்பட்டது.
இதில் சிவசங்கரி ஆதிக்கம் செலுத்தி தமக்கு எதிராகக் களமிறங்கியவரை வீழ்த்தினார்.
அண்மைக் காலங்களில் நிபுணத்துவ சுவர்ப்பந்துச் சங்கம் நடத்தும் உலகப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் மலேசியர் எனும் பெருமை சிவசங்கரியைச் சேரும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற சுவர்ப்பந்துப் போட்டியில் சிவசங்கரி வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
லண்டன் கிளாசிக் பட்டத்தை கைப்பற்றிய சிவசங்கரிக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த வெற்றி மேலும் பல வெற்றிகளுக்கு அடித்தளமாக அமையட்டும் என்று சிவசங்கரியை வாழ்த்தி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு அன்வார் பதிவிட்டார்.