தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமநிலையில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள்

2 mins read
3ccb6e69-bad0-45a1-89f5-1b0406afe6e3
ரியால் மட்ரிட்டுக்கு எதிராக கோல் போட்டுக் கொண்டாடும் மான்செஸ்டர் சிட்டி வீரர் ஃபில் ஃபோடன் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி
பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிராக கோல் போடும் ஆர்சனலின் புக்காயோ சக்கா (நடுவில்).
பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிராக கோல் போடும் ஆர்சனலின் புக்காயோ சக்கா (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு சமநிலை கண்டன.

இந்த ஆட்டம் மட்ரிட்டில் நடைபெற்றது.

இரண்டாவது ஆட்டம் சிட்டியில் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இடைவேளையின்போது ரியால் 2-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது

இருப்பினும், பிற்பாதி ஆட்டத்தில் சிட்டியின் அதிரடி ஆட்டம் ரியால் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்தடுத்து கோல்களைப் போட்ட சிட்டி 3-2 என முன்னிலை வகித்து வெற்றியை நெருங்கியது.

ஆனால் ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் ரியால் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.

“இரண்டாவது ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வெற்றிக்குக் குறிவைத்து சிட்டியின் விளையாட்டரங்கில் களமிறங்குவோம்,” என்று ரியாலின் நட்சத்திர வீரர் ரோட்ரிகோ சில்வா தெரிவித்தார்.

மற்றொரு காலிறுதி சுற்று முதல் ஆட்டத்தில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கும் இங்கிலாந்தின் ஆர்சனலும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. இந்த ஆட்டம் லண்டனில் ஆர்சனலின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆட்டத்தின் முதல் கோலை ஆர்சனல் போட்டது.

இருப்பினும், மனந்தளராமல் தாக்குதல்களை நடத்திய பயர்ன் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது.

ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் இருந்தபோது பயர்னுக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

பெனால்டியை கோலாக்கினார் பயர்னின் நட்சத்திர வீரர் ஹேரி கேன்.

ஆர்சனலுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் கோல் போடுவது வழக்கம் . இம்முறையும் அவர் குறி தப்பவில்லை.

விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஆர்சனல், ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான இரண்டாவது ஆட்டம் மியூனிக்கில் நடைபெறும்.

ரியால்-சிட்டி, ஆர்சனல்-பயர்ன் என காற்பந்து ஜாம்பவான்களுக்கு இடையிலான காலிறுதிச் சுற்று முதல் ஆட்டங்கள் சமநிலையில் முடிந்துள்ள நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் இரண்டாவது ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்புச் சொற்கள்