எஃப் 1 அணியின் ஆதரவைப் பெற்ற 16 வயது சிங்கப்பூரர்

2 mins read
a8ad7a17-d042-4c79-9467-ae64e5cfb60d
சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயது கபீர் அனுராக் எஃப்4 கார் பந்தயப் போட்டிகளில் சாதித்து வருகிறார். அவர் தற்போது அல்பைன் அகாடமி’யில் உள்ளார். - படம்: அல்பைன் எஃப்1 அணி

சிங்கப்பூரைச் சேர்ந்த எஃப்4 பந்தய வீரரான கபீர் அனுராக், 16, ‘அல்பைன் அகாடமி’யின் ஓட்டுநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆர்-ஏஸ் ஜிபியுடன் ஆறு எஃப்4 சோதனைகளைச் செய்ய ‘ஷிஃப்டர் கார்ட்டிங்’கில் இவர் தேர்ச்சி பெற்றார்.

பின்னர், அதே ஆண்டு ஜூலையில் இத்தாலிய எஃப்4-ன் பால் ரிக்கார்ட் சுற்றில் குழுவுடன் சேர்ந்து அறிமுகமானார். முதலிரு பந்தயங்களில் 26வது, 17வது இடத்தில் அவர் வந்தார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘யுஎஸ் ரேசிங்’ அணிக்கு மாறிய அனுராக், அடுத்த இரண்டு சுற்றுகளுக்கு அந்த அணிக்காக பந்தயக் கார் ஓட்டினார். வெற்றியாளர் தரவரிசையில் இவர் 41வது இடத்தைப் பிடித்தார்.

2024 ஃபார்முலா குளிர்காலத் தொடர், யூரோ 4, இத்தாலிய எஃப்4 பருவங்களுக்கான வரிசையில் அனுராக் இடம்பெறுவார் என்று இவ்வாண்டு பிப்ரவரியில் அந்த ஜெர்மானிய அணி அறிவித்திருந்தது.

‘எஃப் குளிர்காலத் தொடர்’ இயக்கம் நடந்து முடிந்துவிட்டது. அதில் கடந்த ஆண்டைவிட அனுராக் சிறப்பாகச் செயல்பட்டார். இரு பந்தயங்களில் ஐந்தாவது இடத்தை இவர் பிடித்ததே ஆகச் சிறந்த முடிவாகும். வெற்றியாளர் தரவரிசையில் 14வது இடத்துக்கு முன்னேறிய இவர், பந்தயத்தில் ஒரு சுற்றை ஆக வேகமாகவும் முடித்தார்.

“2024 பருவத்திற்கு அல்பைன் அகாடமியில் சேர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,” என்றார் அனுராக்.

“அல்பைன் ஃபார்முலா 1 அணியின் ஆதரவும் நம்பிக்கையும் கிடைத்திருப்பதையும் வாழ்க்கைத்தொழிலில் முன்னேற அணியின் ஓட்டுநர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதையும் நான் கௌரவமாகக் கருதுகிறேன்.

“இத்தாலிய எஃப்4, யூரோ 4 பந்தயத்தில் இவ்வாண்டு புதிய பருவத்தை நான் தொடங்குவேன். அல்பைன் அணியில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அனுராக் சொன்னார்.

அனைத்துலக மோட்டார் விளையாட்டுத் துறையில் திறமைமிக்க சிங்கப்பூர் இளையர் ஒருவர் சிறப்பாக முன்னேறியிருப்பது குறித்து சிங்கப்பூர் கிராண்ட் ஃப்ரீ மகிழ்வதாக அதன் பந்தயச் செயலாக்க இயக்குநர் ஜெனட் டான் தமிழ் முரசிடம் தெரிவித்தார். “இந்தப் பருவத்திற்கான அவரது பந்தய விளையாட்டிற்காக அவரை வாழ்த்துகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்