தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 உலகக் கிண்ணம்: இந்திய அணியில் சாம்சன், பன்ட்

2 mins read
895e29f2-68ce-4eb9-a89d-224bd8044c2c
சஞ்சு சாம்சன். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மீண்டுவந்துள்ள விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்டும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.

நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராகச் செயல்படும் ஹார்திக் பாண்டியாவின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருந்தபோதும், அவர் இந்திய அணியின் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் சதம் விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே இருவரும் அணித் தேர்வுக் குழுவினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் யுஸ்வேந்திர சகல் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2023 ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். அவருடன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணித்தலைவர் கே.எல். ராகுலுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் இஷான் கிஷனுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் தயார்நிலை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஜூன் 5ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஹார்திக் பாண்டியா (துணைத் தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது சிராஜ்.

குறிப்புச் சொற்கள்