தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பந்துவீச்சில் வலுவிழந்த நிலையில் சென்னை

2 mins read
3bab01c9-27f2-4283-b5c0-a2347139c654
மே1 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது. - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: இப்பருவத்திற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக, மூன்றாவது, நான்காவது இடங்களுக்கு நான்கு அணிகள் போட்டி போடுகின்றன. அதனால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் மாலை 6 மணிக்கு தர்மசாலாவில் நடக்கிறது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இது முக்கியமான ஆட்டம்.

இதற்கு முன்னர் மே1 ஆம் தேதி இரு அணிகளும் சென்னையில் மோதின. அதில் பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற்றது.

சென்னை அணிக்கு அதன் பந்தடிப்பு பலமாக உள்ளது. இருப்பினும், அதன் பந்துவீச்சு பெருஞ்சிக்கலை எதிர்நோக்கி உள்ளது.

தீபக் சாகர் காயமடைந்துள்ளார். அவர் இத்தொடரில் இனி விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. முஸ்தஃபிசுர் ரஹ்மான் தாயகம் திரும்பிவிட்டார். பத்திரானாவும் துஷார் தே‌ஷ்பாண்டேவும் காயங்களால் அவதிப்படுகின்றனர். இதனால், சென்னை அணியின் பந்துவீச்சு வலுவிழந்துள்ளது.

பஞ்சாப் அணி அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் பந்தடிப்பாளர்களும் நிலைமைக்கு ஏற்ப விளையாடுவதால் எதிரணிகளுக்குச் சவால் தரும் அணியாக மாறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் அது புள்ளிப்பட்டியலில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு லக்னோவில் நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்