லெவர்க்குசன்: ஜெர்மானிய காற்பந்துக் குழுவான பயர் லெவர்க்குசன், அனைத்துப் போட்டிகளிலும் 49 ஆட்டங்களில் தோல்வியடையாமல் வரலாறு படைத்துள்ளது.
ஐரோப்பிய காற்பந்தில் இதற்கு முன்பு எந்தக் குழுவும் இத்தனை ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்ததில்லை.
யூயேஃபா யூரோப்பா லீக் போட்டி அரையிறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் இத்தாலியின் ரோமாவுடன் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது லெவர்க்குசன். அரையிறுதிச் சுற்றில் இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் லெவர்க்குசன் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. 4-2 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் லெவர்க்குசன் இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.
அரையிறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் ரோமா 2-1 என முன்னணியில் இருந்தது. கடைசி சில நிமிடங்களில் லெவர்க்குசனின் ஜோசெப் ஸ்டானிசிச் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
அது, லெவர்க்குசன் வரலாறு படைக்க வகைசெய்தது.
யூரோப்பா லீக் இறுதியாட்டத்தில் இத்தாலியின் அட்டலான்டாவுடன் மோதும் லெவர்க்குசன். இப்போட்டியின் மற்றோர் அரையிறுதிச் சுற்றில் அட்டலான்டா, பிரான்சின் மார்செய் குழுவை 4-1 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் வென்றது.