நம்பிக்கையின் பாதையில் ஆர்சனல்

நம்பிக்கையின் பாதையில் ஆர்சனல்

2 mins read
8f26723e-bcc9-43d6-84ab-0b9a0035c596
போர்ன்மத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சனல் வீரர்கள் (சிவப்பு, வெள்ளை சீருடை). - படம்: இபிஏ

மான்செஸ்டர்: இப்பருவத்தில் தங்களால் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் விருதை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை ஆர்சனல் இழந்துவிடக்கூடாது என்று அக்குழுவின் நிர்வாகி மிக்கெல் அர்டெட்டா கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று (மே 12) ஆர்சனல், தடுமாறிக்கொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதவுள்ளது. அந்த ஆட்டத்தை முன்னிட்டுப் பேசினார் அர்ட்டெட்டா.

யுனைடெட்டின் சொந்த மண்ணான ஓல்ட் டிராஃபர்டில் ஆர்சனல் கடந்த 18 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே வென்றிருக்கிறது. அதேவேளை, தற்போதைய நிலவரப்படி யுனைடெட் பெரிதும் சிரமப்படுகிறது.

லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் மான்செஸ்டர் சிட்டியும் ஈடுபட்டுள்ளது. அக்குழு எஞ்சியுள்ள தனது அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் லீக் விருதைக் கைப்பற்றும்.

எனினும், இப்படிப்பட்ட சூழலிலும் தனது விளையாட்டாளர்கள் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றார் அர்ட்டெட்டா.

“காரியம் கைகூடும் என்று நாங்கள் நம்பவேண்டும். நம்முடன் மோதும் குழுக்களைவிட சிறப்பாக விளையாட முயற்சி செய்யவேண்டும், அவற்றை வெல்லவேண்டும். அதற்குப் பிறகு நிலைமை தெரியவரும்,” என்று அர்டெட்டா குறிப்பிட்டார்.

“ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் நாங்கள் அதிகம் சோபிக்காததால் எதிர்நோக்கும் சவாலை நாங்கள் அறிவோம். அதனால் ஆட்டத்தில் வெல்ல நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடவேண்டிய நிலையில் இருக்கிறோம்,” என்றும் குறிப்பிட்டார் அர்ட்டெட்டா.

யுனைடெட் கடந்த 10 லீக் ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. இருந்தாலும் அக்குழு சவாலானதாக இருக்கக்கூடும் என்றும் அர்டெட்டா எச்சரித்தார்.

யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஆர்சனலின் சில முக்கிய விளையாட்டாளர்கள் ஆட்டத்தில் இடம்பெறாமல் இருக்கக்கூடும், அது அக்குழுவுக்குப் பிரச்சினையாக அமையலாம்.

நட்சத்திரம் புக்காயோ சாக்கா, தற்காப்பு வீரர் தாக்கெஹிரோ தொமியாசு இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆட்டத்தில் இடம்பெறுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டியின் துணை நிர்வாகியாக இருந்த அர்டெட்டா, அக்குழுவைப் பற்றியும் பேசினார்.

“கடந்த 10, 15 ஆண்டுகளாக சிட்டி மிகச் சிறப்பாக விளையாடிவந்துள்ளது. ஆனால் அதை மாற்றுவது எங்கள் எண்ணமாகும்,” என்றார் அவர்.

பருவம் முழுவதும் பல விளையாட்டாளர்கள் காயமுற்றதால் யுனைடெட் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறது. அதன் நிர்வாகி எரிக் டென் ஹாக் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், அதுபற்றித் தான் கவலைப்படவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார் டென் ஹாக்.

காயமுற்றிருந்த யுனைடெட்டின் மார்க்கஸ் ரே‌ஷ்ஃபரட், ஸ்காட் மெக்டொமினே, புரூனோ ஃபெர்னாண்டஸ் மூவரும் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்