தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,500 வீரர்களுக்கான புதிய கிரிக்கெட் லீக்

2 mins read
19a0effb-3436-443e-b1a4-dadc48eb4c2f
புதிய கிரிக்கெட் லீக்கைத் தொடங்கும் சிங்கப்பூர் இந்தியர் சங்கம், சிலோன் விளையாட்டு மன்றம். - படம்: தப்லா

சிங்கப்பூரில் 1,500க்கும் அதிகமான விளையாட்டாளர்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்புத் தர சிங்கப்பூர் இந்தியர் சங்கமும் சிலோன் விளையாட்டு மன்றமும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவ்விரு அமைப்புகளும் சேர்ந்து உள்ளூரில் ஒரு கிரிக்கெட் லீக்கைத் தொடங்குகின்றன. லீக் ஆட்டங்கள் வார இறுதியில் நடைபெறும்.

பாலஸ்டியர் பிரிமியர் லீக் (பிபிஎல்) என்றழைக்கப்படும் இந்த லீக்கில் 20, 25, 30, 35 ஓவர் ஆட்டங்கள் இடம்பெறும். சிங்கப்பூர் இந்தியர் சங்கம், சிலோன் விளையாட்டு மன்றம் ஆகியவற்றின் திடல்களில் ஆட்டங்கள் நடைபெறும்.

இந்த லீக்கில் 56 குழுக்கள் இடம்பெறும். நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் குழுக்களுக்கான தனி லீக் ஒன்றும் இதில் அடங்கும். லீக்கில் விளையாட விரும்பும் வீரர்கள் சாதாரண குழுக்கள் அல்லது நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் குழுக்களில் விளையாடலாம்.

“இந்த கிரிக்கெட் லீக் சமூகத்தை ஒன்றிணைக்கும். பல விளையாட்டாளர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்,” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ஆலோசகருமான எஸ். சந்திரதாஸ் மே ஐந்தாம் தேதியன்று கூறினார்.

புதிய லீக் குறித்த எல்லா விவரங்களையும் கொண்ட செயலி ஒன்றையும் ஏற்பாட்டாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

“போதுமான திடல்கள் இல்லாததால் பல கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் விளையாட வகைசெய்ய பிபிஎல் லீக்கைத் தொடங்க முடிவுசெய்தோம். ஆண்டு முழுவதும் அவர்கள் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும்,” என்று சிலோன் விளையாட்டு மன்றத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான செல்வ ராஜா குறிப்பிட்டார்.

லீக்கில் கடும் போட்டி இருக்கும் என்றார் அதன் 30 ஓவர் பிரிவில் இடம்பெறும் கிராப் நிறுவனத்தைப் பிரதிநிதிக்கும் அணித் தலைவர் சுதன்‌ஷு குப்தா.

“எனினும், ஒன்றாகப் பழகி, கற்றலில் ஈடுபட்டு வளர்ச்சியடைய லீக் எங்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த லீக்கின் மூலம் இன்பமும் மகிழ்ச்சியும் பெறுவதுதான் இலக்கு,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்