லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஃபுல்ஹமை 4-0 எனும் கோல் கணக்கில் வதம் செய்தது மான்செஸ்டர் சிட்டி.
இப்பருவம் தனக்கு எஞ்சியிருக்கும் ஆட்டங்களை வென்றால் சிட்டி லீக் விருதை வென்றுவிடும். அக்குழுவுக்கு இன்னும் இரண்டே ஆட்டங்கள் மிச்சமுள்ள நிலையில் கோல்களைக் குவித்து எதிர்க் குழுக்களை ஊதித் தள்ளிவருகிறது சிட்டி.
அதோடு, அடுத்தடுத்து மூன்று முறை லீக் விருதை வென்றிருக்கும் அக்குழு, நான்காவது முறையும் வாகை சூடி வரலாறு படைக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. பிரிமியர் லீக் வரலாற்றில் இதுவரை எந்தக் குழுவும் அவ்வாறு செய்ததில்லை.
ஃபுல்ஹமுக்கு எதிரான ஆட்டத்தில் சிட்டியின் தற்காப்பு வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் இரண்டு கோல்களைப் போட்டார். மற்ற இரு கோல்களை ஃபில் போடன், ஹூலியன் அல்வாரெஸ் ஆகியோர் போட்டனர். பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் அல்வாரெஸ்.
சனிக்கிழமை (மே 11) நடைபெற்ற இதர பிரிமியர் லீக் ஆட்டங்கள் சிலவற்றில் செல்சி, நொட்டிங்கம் ஃபாரஸ்டை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது. நியூகாசல் யுனைடெட், பிரைட்டன் இரண்டும் 1-1 என சமநிலை கண்டன.

