தாய்லாந்து பொது விருது பேட்மிண்டன்: கால் இறுதிச் சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி

தாய்லாந்து பொது விருது பேட்மிண்டன்: கால் இறுதிச் சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி

2 mins read
5228c08e-d3e3-4784-b87c-e0fe87355fef
கால் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக்-ஷிராக் ஜோடி மலேசியாவின் ஜூனைதி ஆரிப், ராய் கிங் யப் ஜோடியுடன் மோதுகிறது. - படம்: இந்திய ஊடகம்

பேங்காக்: தாய்லாந்து பொது விருது பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆம் சுற்றில் இந்தியாவின் மெய்ராபா லுவாங் மைஸ்னம், டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெய்ராபா லுவாங் மைஸ்னம் 21-14, 22-20 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் 22 வயது மெய்ராபா லுவாங் மைஸ்னம்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 2ஆம் சுற்றில் உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது 69வது இடத்தில் உள்ள சீனாவின் ஜி சவோ நான், ஹெங் வெய் ஹன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21 11 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதிச் சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி மலேசியாவின் ஜூனைதி ஆரிப், ராய் கிங் யப் ஜோடியுடன் மோதுகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹா, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் ஹன் யியை எதிர்த்து விளையாடினார். இதில் அஸ்மிதா சாலிஹா 15-21, 21-12, 12-21 என்ற ஆட்டக்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சதீஷ் கருணாகரன், ஆத்யா வரியத் ஜோடி 10-21,17-21 என்ற ஆட்டக்கணக்கில் இந்தோனீசியாவின் ரினோவ் ரிவால்டி, பிதா ஹனிங்டியாஸ் மென்டாரி ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

மகளிர் இரட்டையர் பிரிவு 2வதுசுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-19, 21-17 என்ற ஆட்டக்கணக்கில் தைவானின் ஹங் என் சூ, லின் யூ ஜோடியை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

குறிப்புச் சொற்கள்