லண்டன்: இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தின் கடைசி வார ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் எந்தக் குழு லீக் விருதை வெல்லும் என்பது இன்னமும் தெரியவில்லை.
பட்டியலில் முதலிடம் வகிக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இரண்டாம் இடத்தில் உள்ள ஆர்சனலுக்கும் இடையே இரண்டு புள்ளிகள் வித்தியாசம்தான் உள்ளன.
சிட்டி வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான அதன் கடைசி ஆட்டத்தில் வெற்றிகண்டால் அது தொடர்ந்து நான்காவது ஆண்டாக லீக் விருதை வென்று வரலாறு படைக்கும். ஆனால் சிட்டி வெல்லத் தவறி ஆர்சனல் எவர்ட்டனை வென்றால் 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆர்சனல் வாகை சூடும்.
சிட்டி வெஸ்ட் ஹேமை வெல்லும் என்பது பரவலான எதிர்பார்ப்பாகும்.
சிட்டி, ஆர்சனல் இரண்டும் கடந்த சில மாதங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளன. சென்ற ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதி முதல் சிட்டி ஆறு புள்ளிகளை மட்டுமே தவறவிட்டுள்ளது. ஆர்சனல், கடந்த 17 லீக் ஆட்டங்களில் 15ல் வென்று ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்தது. அந்தக் காலகட்டத்தில் அது சிட்டியுடன் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இருந்தாலும் சிட்டியின் கைதான் ஓங்கியிருக்கிறது. எனினும், மெத்தனமாக இருந்துவிட முடியாது என்கிறார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.
“சிட்டிக்குப் போட்டியாக இருக்கும் குழு கோட்டைவிடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறாகும். எவர்ட்டன், ஆர்சனலை வெல்லவிடாமல் செய்யும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
“அது நடக்காது. அதனால் எங்கள் ஆட்டத்தில் நாங்கள் வெல்லாவிட்டால் லீக் விருதை ஆர்சனல் தட்டிச் செல்லும் என்பதை எனது வீரர்கள் அறிவர். எங்களுக்கு ஓர் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. எங்கள் தலையெழுத்து எங்கள் கையில் உள்ளது. அந்த ஆட்டத்தை வென்றுதான் விருதைக் கைப்பற்ற முடியும்,” என்றார் கார்டியோலா.
ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டியில் கார்டியோலாவின் துணை நிர்வாகியாகப் பணியாற்றியவர். இப்போது லீக் விருதை வெல்லும் போட்டியில் இருவரும் நேருக்கு நேர் நிற்கின்றனர்.
இந்த லீக் பருவத்தில் 27 ஆட்டங்களில் வென்று வரலாறு படைத்துள்ளது ஆர்சனல். இதற்கு முன்பு எந்தக் குழுவும் ஒரு லீக் பருவத்தில் இத்தனை ஆட்டங்களை வென்றதில்லை.
அப்படியிருந்தும் ஆர்சனலால் சிட்டியைக் கவிழ்க்க முடியாமல் போகலாம். ஆனால் அசரவில்லை அர்ட்டெட்டா. “எங்கள் கனவு இன்னமும் நனவாகலாம்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பிரிமியர் லீக் பருவத்தின் கடைசி ஆட்டங்கள் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மே 19) இரவு 11 மணிக்கு நடைபெறும்.

