டப்லின்: யூயேஃபா யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், தொடர்ந்து 51 ஆட்டங்களில் தோல்வியடையாமல் சாதனை படைத்த பயர் லெவர்க்குசனை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது அட்டலான்டா.
அதன் மூலம் இத்தாலிய குழுவான அட்டலான்டா, 61 ஆண்டுகளில் முதன்முறையாக கிண்ணம் ஒன்றை வென்றது.
ஆட்டத்தில் அட்டலான்டாவின் அடெமொலா லுக்மன் மூன்று கோல்களையும் போட்டார். 49 ஆண்டுகளில் ஐரோப்பியக் காற்பந்துப் போட்டி ஒன்றின் இறுதியாட்டத்தில் மூன்று கோல்களைப் போட்ட முதல் வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.
ஜெர்மனியைச் சேர்ந்த லெவர்க்குசன், இந்த ஆட்டத்துக்கு முன்பு இப்பருவம் எல்லா போட்டிகளிலும் தோல்வியடையாமால் இருந்து பல தரப்பினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அண்மையில் அதன் வரலாற்றில் முதன்முறையாக ஜெர்மானிய பண்டஸ்லிகா லீக் விருதைக் கைப்பற்றியது.
லெவர்க்குசனின் இளம் நிர்வாகி ஷாபி அலொன்சோ பலரால் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறார்.
அப்படியிருக்கையில் அட்டலான்டாவின் 66 வயது நிர்வாகியான ஜியான் பியெரோ கஸ்பரினி, அலொன்சோவைத் திக்குமுக்காடச் செய்தார். இதுவே நிர்வாகியாக கஸ்பரினி வென்றுள்ள முதல் கிண்ணமாகும்.
அதோடு, சிறிய குழுவான அட்டலான்டாவைப் பெரிய குழுக்களுக்குப் போட்டி தரும் ஒன்றாக உருவெடுக்கச் செய்துள்ளார் கஸ்பரினி.