பாரிஸ்: பிரான்சின் நட்சத்திரக் காற்பந்து வீரரான ஒலிவியே ஜிரூ, இவ்வாண்டின் யூரோ போட்டிக்குப் பிறகு தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
37 வயது தாக்குதல் ஆட்டக்காரரான ஜிரூ, பிரான்ஸ் அணிக்கு 57 கோல்களைக் குவித்துள்ளார். அவரே வரலாற்றில் அந்த அணிக்கு ஆக அதிக கோல்களைப் போட்டவர் ஆவார்.
பிரான்சுக்கு 131 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார் ஜிரூ. இத்தாலியின் ஏசி மிலான் குழுவில் விளையாடிக்கொண்டிருந்த இவர், இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் குழுவில் சேர்ந்துகொண்டார்.
2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வென்றது. அதில் ஜிரூ முக்கிய வீரராகத் திகழ்ந்தார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் இவர் பிரான்ஸ் அணியில் இடம்பெற்றார்.
அப்போட்டியில் பிரான்ஸ் இறுதியாட்டம் வரை சென்றது. விறுவிறுப்பான இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா வென்று 36 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
2022 போட்டிக்கு முன்பு தியரி ஒன்ரிதான் பிரான்சுக்கு ஆக அதிக கோல்களைப் போட்டிருந்தார். போட்டியின்போது ஒன்ரியைப் பின்னுக்குத் தள்ளினார் ஜிரூ.