லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகிக்கு எந்நேரமும் வேலை போய்விடலாம் என்ற நெருக்கடி.
இந்நிலையில் சனிக்கிழமை (மே 25) அன்று மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டிக்கு இடையே நடைபெறவுள்ள எஃப்ஏ கிண்ணப் போட்டிக்கு தனது யுனைடெட் குழுவை தயார்படுத்தும் எரிக் டன் ஹாக், நாளைய போட்டியில் கிண்ணத்தை வென்று அணியை சீரமைக்கும் பணியைத் தொடரப்போவதாக உறுதிபடக் கூறியுள்ளார்.
இந்தக் காற்பந்துப் பருவம் யுனைடெட் குழுவிற்கு சோதனைமிக்கதாக இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் பகுதி உரிமையாளரான ஜிம் ரேட்கிளிஃப் என்பவர் டன் ஹாக்கை நாளைய போட்டிக்குப் பின் பதவி நீக்கம் செய்வது உறுதி என்ற வதந்தி பரவலாக வலம் வந்த வண்ணம் உள்ளது.
இந்தக் காற்பந்துப் பருவத்தில் பிரிமியர் லீக் தரவரிசையில் யுனைடெட் எட்டாவது இடத்தில் உள்ளது. இது 1990ஆம் ஆண்டு காற்பந்துப் பருவத்துக்குப் பின் ஆக மோசமான நிலை என்பது நினைவுகூரத்தக்கது. அத்துடன் சாம்பியன்ஸ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலும் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
இது ஒருபுறம் இருக்க, சென்ற காற்பந்துப் பருவத்தில் டன் ஹாக் நிர்வாகத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக லீக் கிண்ணத்தை வென்றது. ஆனால், குழுவில் ஜேடன் சான்சோ, மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் போன்ற வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அடுத்த மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக இங்கிலாந்து நிர்வாகி கேரத் செளத்கேட், முன்னாள் செல்சி நிர்வாகி மோரிசியோ போக்கெட்டினோ, பயர்ன் மியூனிக் குழுவிலிருந்து வெளியேறும் தாமஸ் டுக்கல், இப்ஸ்விச் டவுன் நிர்வாகி கியரன் மெக்கேனா ஆகியோரில் ஒருவர் யுனைடெட் நிர்வாகியாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், சென்ற ஆண்டு இதே காற்பந்துப் போட்டியில் சிட்டியிடம் தோல்வியடைந்த தனது யுனைடெட் குழு இம்முறை சிட்டியை வெல்லும் என்று டன் ஹாக் திடமாக நம்புகிறார். அதன்மூலம் அடுத்த காற்பந்துப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் யுனைடெட் பெறும் என்று டன் ஹாக் உறுதியுடன் கூறுகிறார்.
சனிக்கிழமை நடக்கப்போகும் போட்டி யுனைடெட் குழு நிர்வாகியாக தான் கடைசியாக சந்திக்கப்போகும் ஆட்டமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த டன் ஹாக், சிரித்துக்கொண்டே, “அதுபற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. எனது வேலையில் மட்டும் நான் கண்ணும் கருத்துமாக உள்ளேன்.
தொடர்புடைய செய்திகள்
“அதில் முதலாவதாக சனிக்கிழமை ஆட்டத்தை வெல்வது. பின்னர் மான்செஸ்டர் யுனைடெட்டில் ஏற்றுக்கொண்ட திட்டத்தை நிறைவேற்றுவது
“ஒவ்வொரு காற்பந்துப் பருவத்துக்குப் பிறகு எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று ஆய்வு செய்து பின்னர் தேவையான மாற்றங்கள் குறித்து ஆலோசிப்பது.
இது பற்றி நாங்கள் அண்மையில் கலந்துரையாடி உள்ளோம், இங்கிருக்கும் வீரர்கள் முன்னேறி வருகின்றனர். அவர்களுடைய மதிப்பும் வளர்ந்து வருகிறது,” என்று டன் ஹாக் விளக்கினார்.


