தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிண்ணத்தை வெல்லத் துடிக்கும் கோல்கத்தா - ஹைதராபாத்

2 mins read
6246c07a-9c24-473c-af78-f21737b48757
இந்தப் பருவத்தில் கோல்கத்தாவும் ஹைதராபாத்தும் இரண்டு முறை மோதியுள்ளன. அந்த இரண்டு ஆட்டத்திலும் கோல்கத்தா வெற்றிபெற்றது. - படம்: ஐபிஎல்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கிறது. ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது.

இப்பருவத்தில் கோல்கத்தாவும் ஹைதராபாத்தும் இரண்டு முறை மோதியுள்ளன. அந்த இரண்டு ஆட்டத்திலும் கோல்கத்தா வெற்றிபெற்றது.

பருவத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கோல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றில் ஹைதராபாத் அணியை எளிதாக வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

பந்தடிப்பில் சுனில் நரேன், வெங்கடே‌ஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஆண்டிரே ர‌ஸ்சல் என நிலைமைக்கு ஏற்றவாறு ஆடக்கூடிய வீரர்கள் உள்ளதால் கோல்கத்தா அணி பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.

அதேபோல் பந்துவீச்சில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, மிட்சல் ஸ்டார்க், ஹர்சித் ரானா என பலரும் நம்பிக்கைத் தருகின்றனர்.

ஹைதராபாத் அணியின் மிகப் பெரும் பலம் அந்த அணியின் தொடக்க நிலை பந்தடிப்பாளர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட். இரு வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தொடக்கம் முதலே அடித்து ஆடக்கூடியவர்கள்.

பந்தடிப்பின் இறுதிகட்டத்தில் ஹென்ரிக் கிளாசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் கடந்த சில ஆட்டங்களாக டிராவிஸ் ஹெட்டால் ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. அதனால் ஹைதராபாத் அணி சற்று பலவீனமாக உள்ளது.

இறுதியாட்டம் நடக்கும் ஆடுகளம் பந்தடிப்புக்கு அதிக அளவில் உதவும் என்பதால் தங்களது பந்தடிப்பாளர்கள் குவிக்கும் ஓட்டங்களை நம்பியே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் களமிறங்குவார்கள்.

இருப்பினும் அபி‌‌ஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஓட்டங்கள் குவிக்கத் தொடங்கிவிட்டால் கோல்கத்தா அணிக்கு அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால் இறுதியாட்டத்தில் அனல் பறக்கக்கூடும். 

இதற்கு முன்னர் கோல்கத்தா அணி 2014ஆம் ஆண்டில் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியது. கிண்ணத்தை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் கோல்கத்தா இந்த வாய்ப்பை தவறவிடாது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் ஹைதராபாத் அணி 2016ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றது. 2018ஆம் ஆண்டு இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் ஏமாற்றம்

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியைத் தழுவியது. முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.

இலக்கை விரட்டிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இறுதி ஆட்டத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பை இழந்தது.

குறிப்புச் சொற்கள்