லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், அபாரமாக விளையாடிவந்த மான்செஸ்டர் சிட்டியை வென்று வாகை சூடியது மான்செஸ்டர் யுனைடெட்.
இறுதியாட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது யுனைடெட். முற்பாதியாட்டத்தில் அலெஹாண்ட்ரோ கர்னாச்சோ, கொபி மெய்னூ ஆகியோர் கோல் போட்டு 2-0 என யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினர்.
ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் ஜெரிமி டொக்கு, சிட்டிக்கு ஒரு கோலைப் போட்டு நம்பிக்கையளித்தார்.
அதற்குப் பிறகும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி வெற்றிபெற்றது யுனைடெட். அக்குழு 13வது முறையாக எஃப்ஏ கிண்ணத்தைக் கைப்பற்றியது. கடைசியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கிண்ணத்தை வென்றிருந்தது.
இந்தப் பருவம் பல ஆட்டங்களில் சோபிக்காத யுனைடெட் அதன் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் யுனைடெட் எட்டாவது இடத்தில்தான் முடித்தது.
அதனால் எஃப்ஏ கிண்ணத்தை வென்ற பிறகும் அதன் நிர்வாகி எரிக் டென் ஹாக் பணிநீக்கம் செய்யப்படக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அடுத்த பருவம் தான் தொடர்ந்து பதவியில் இருப்போமா என்பது தெரியவில்லை என்று டென் ஹாக் ஒப்புக்கொண்டார்.
சென்ற பருவம் யுனைடெட்டை கரபாவ் கிண்ணத்தை வெல்லவைத்த டென் ஹாக், இம்முறை எஃப்ஏ கிண்ணத்தையும் வெல்லச் செய்துள்ளார்.
“குழு முன்னேறிவருகிறது. நாங்கள் கிண்ணங்களை வென்று வருகிறோம். ஈராண்டுகளில் இரண்டு கிண்ணங்களை வென்றது ஓரளவு சிறப்புத் தேர்ச்சியாகும். மூன்று முறை போட்டிகளின் இறுதியாட்டத்துக்குத் தகுதியும்பெற்றதும் நல்ல தேர்ச்சிதான். ஆனால் நான் திருப்தியடையவில்லை. நாம் தொடர்ந்து முன்னேறவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும். நான் தேவையில்லை என்று குழு நினைத்தால் வேறு குழுவில் சேர்ந்து கிண்ணங்களை வெல்வேன். நிர்வாகியாக நான் கிண்ணங்களை வென்றுகொண்டே இருந்திருக்கிறேன்,” என்று எடுத்துரைத்தார் டென் ஹாக்.

