பாரிஸ்: பிரெஞ்சு காற்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி குழு, ஒலிம்பிக் லியோனைய்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று வாகை சூடியது.
பிஎஸ்ஜி, இப்பருவத்தில் அதன் கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தான் தலை நிமிர்ந்தபடி விடைபெறுவதாகக் கூறியுள்ளார் அதன் நட்சத்திரம் கிலியோன் எம்பாப்பே.
ஏழு ஆண்டுகளாக பிஎஸ்ஜியில் விளையாடியிருக்கும் தாக்குதல் ஆட்டக்காரரான எம்பாப்பே, இப்பருவம் நிறைவடைந்ததும் குழுவிலிருந்து வெளியேறப்போவதாக இம்மாதம் அறிவித்திருந்தார். பிஎஸ்ஜிக்கு மொத்தம் 256 கோல்களைக் குவித்திருக்கும் இவர், அக்குழுவின் வரலாற்றில் ஆக அதிக கோல்களைப் போட்டவர் ஆவார்.
பிரெஞ்சு கிண்ணப் போட்டி இறுதியாட்டம்தான் அவர் பிஎஸ்ஜிக்கு விளையாடிய கடைசி ஆட்டமாகும்.
“நல்ல நினைவுகள் மட்டுமே இருக்கின்றன. பிஎஸ்ஜி மட்டுமின்றி இந்த (பிரெஞ்சு) லீக்கிலும் பல ஆண்டுகளாக நல்ல நினைவுகளைக் கொண்டுள்ளேன். தலை நிமிர்ந்து வெளியேறவேண்டும். குறிப்பாக கிண்ணத்தை வென்று அவ்வாறு செய்யவேண்டும். நல்லதை மட்டும் மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்,” என்றார் எம்பாப்பே.
பிரான்ஸ் நட்சத்திரமுமான எம்பாப்பே, இனி ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.