மியூனிக்: பிரபல ஜெர்மானிய காற்பந்துக் குழுவான பயர்ன் மியூனிக்கின் அடுத்த நிர்வாகியாக முன்னாள் மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் வின்சென்ட் கொம்பெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பயர்னின் மேற்பார்வைக் குழுத் தலைவரான கார்ல்-ஹைன்ஸ் ருமெனிக செவ்வாய்க்கிழமையன்று (மே 28) இதனைத் தெரிவித்தார். கொம்பெனியை நிர்வாகியாக நியமிப்பதற்கான ஒப்பந்தத்தில் இடம்பெறும் சில அம்சங்கள் குறித்து முடிவெடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொம்பெனி, தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த பர்ன்லியின் நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். அவரின் தலைமையில், பர்ன்லி கடந்த இங்கிலிஷ் பிரிமியர் பருவத்தில் சோபிக்கவில்லை. அதனால் அடுத்த பருவம் பிரிமியர் லீக்குக்குக்கீழ் உள்ள சாம்பியன்ஷிப் லீக்கிற்கு அக்குழு தள்ளப்பட்டது.
இருந்தாலும் முந்தய பருவத்தில் கொம்பெனிதான் பர்ன்லியை சாம்பியன்ஷிப்பிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு முன்னேறச் செய்தார். 38 வயது கொம்பெனியைத் தனது அடுத்த நிர்வாகியாக நியமிக்க பயர்ன் விருப்பம் தெரிவித்து வந்துள்ளது.
நிர்வாகி பெப் கார்டியோலாவின் தலைமையில் மான்செஸ்டர் சிட்டியின் அணித் தலைவராக இருந்தார் பெல்ஜியத்தைச் சேர்ந்த கொம்பெனி.
கொம்பெனியைத் தேர்ந்தெடுப்பதில் கார்டியோலாவுக்குப் பெரும்பங்கு இருப்பதாக ருமெனிக தெரிவித்தார். 2013க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் கார்டியோலா பயர்ன் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார்.