ஏலத்துக்கு வரும் மரடோனாவின் 1986 உலகக் கிண்ண ‘கோல்டன் பால்’

ஏலத்துக்கு வரும் மரடோனாவின் 1986 உலகக் கிண்ண ‘கோல்டன் பால்’

2 mins read
fe370bfd-b61e-4e76-9c85-26338b9fc194
1986 உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டவரும் மரடோனாதான். - படம்: இணையம்

பாரிஸ்: காற்பந்து உலகின் ஜாம்பவான் கடந்த 1986 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் வென்ற ‘கோல்டன் பால்’ விருது வரும் வாரம் ஏலத்துக்கு வருகிறது.

கடந்த நூற்றாண்டின் சிறந்த காற்பந்தாட்ட வீரராக அறியப்படுபவர் டியாகோ மரடோனா. கடந்த 2020ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் காலமானார். அர்ஜெண்டினா அணிக்காக 1977 ஆண்டு முதல் 1994 ஆண்டு வரையில் அனைத்துலக அளவில் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தம் நாட்டுக்காக பதிவு செய்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 34.

நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 1986 உலகக் கிண்ணத்தை வென்றிருந்தது அர்ஜெண்டினா. உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் கேப்டனாக செயல்பட்டவரும் மரடோனாதான். அந்த தொடரில் 5 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் வென்றிருந்தார்.

இந்த சூழலில்தான் பல தசாப்தங்களாக காணாமல் போயிருந்த இருந்த மரடோனாவின் ‘தங்கப் பந்து’ விருது (கோல்டன் பால்) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருக்கிறது என்று அடையாளம் காணப்பட்டது. தற்போது அதனை பெஞ்சாய்ப் என்பவர் வைத்துள்ளார். அதனை பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘ஆகட்ஸ்’ என்ற ஏல நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் மரடோனாவின் வாரிசுகள் அவசர வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். ‘கோல்டன் பால்’ தங்கள் வசம் இருந்து களவு போனதாகவும் தெரிவித்தனர். தன்னிடம் உள்ள விருது களவாடிய பொருள் என்று தனக்கு தெரியாது என பெஞ்சாய்ப் தெரிவித்தார். அவர் சொல்வது உண்மை என்ற அடிப்படையில் அதனை ஏலத்தில் விடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதே 1986 உலகக் கிண்ணத் தொடரில் மரடோனாவின் ‘ஹேண்ட் ஆஃப் காட்’ மேலாடையும் கடந்த 2022ல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அந்தப் போட்டி முடிந்ததும் இங்கிலாந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஸ்டீவ் ஹாட்ஜ் வசம் மேலாடையை (ஜெர்சி) மரடோனா கொடுத்திருந்தார். அது 7.14 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்