லார்டஹில் (அமெரிக்கா): இவ்வாண்டின் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு நடைபெற்ற தனது கடைசி நட்புமுறை ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்விகண்டது அயர்லாந்து.
41 ஓட்டங்களில் வென்றது இலங்கை. முதலில் பந்தடித்த அந்த அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு அயர்லாந்து, 18.2 ஓவர்களில் 122 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆட்டத்தில் இலங்கைக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் ஏஞ்சிலோ மேத்தியூஸ். அவர் ஆட்டம் இழக்காமல் 30 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார்.
அயர்லாந்துக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் கர்ட்டிஸ் கேம்ஃபர். அவர் 26 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார்.
புதன்கிழமையன்று (ஜூன் 5) டி20 உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவைச் சந்திக்கிறது அயர்லாந்து. போட்டியில் திங்கட்கிழமையன்று (ஜூன் 3) தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இலங்கை.
டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு நடைபெற்ற மற்றொரு நட்புமுறை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 178 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு ஸ்காட்லாந்து, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ட்ரினிடாட் அண்ட் டொபேகோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் குல்பாடின் நாய்ப். அவர் 30 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசினார்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்காட்லாந்துக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் மார்க் வாட். அவர் 25 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார்.
டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்காட்லாந்து, செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) சக பிரிட்டிஷ் அணியான இங்கிலாந்தைச் சந்திக்கிறது.
அதே நாளில் ஆப்கானிஸ்தானும் யுகாண்டாவும் மோதுகின்றன.

