நியூயார்க்: பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குத்துச்சண்டை களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜேக் பாலுடன் டைசன் மோதவிருக்கும் ஆட்டத்தைப் பலர் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், அந்தச் சண்டை இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் விளம்பரதாரர்கள் வெள்ளிக்கிழமையன்று (மே 31) தெரிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயது டைசனுக்கு ஏற்பட்ட ‘அல்சர்’ புண் மோசமடைந்ததே அதற்குக் காரணம். அதிலிருந்து முழுமையாக குணமடைய அடுத்த சில வாரங்களுக்கு எளிமையான பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அப்போதுதான் பின்னர் அவர் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக ஜேக் பாலுக்கு விளம்பரம் செய்வோர் தெரிவித்தனர்.
வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஆர்லிங்டன் நகரில் இருக்கும் ஏடி&டி விளையாட்டரங்கில் டைசன்-பால் சண்டை நடைபெறவிருந்தது. இனி அதே விளையாட்டரங்கில் இவ்வாண்டு வேறு தேதியில் சண்டை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

