கிண்ணத்தைத் தவறவிட்ட ரொனால்டோவின் அல்-நாசர்

கிண்ணத்தைத் தவறவிட்ட ரொனால்டோவின் அல்-நாசர்

1 mins read
80f7164d-ae0f-4373-b2c0-d3988f7a2b92
அல்-ஹிலாலிடம் தோல்வியடைந்த பிறகு வருத்தத்தில் காணப்பட்ட ரொனால்டோ (வலமிருந்து இரண்டாவது). - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெடா: சவூதி அரேபிய காற்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நாசர், பெனால்டிகளில் அல்-ஹிலாலிடம் தோல்வியடைந்துள்ளது.

ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் அல்-ஹிலாலை முன்னுக்கு அனுப்பினார் அலெக்சாண்டர் மிட்ரொவிச்.

போர்ச்சுகல் நட்சத்திரமான ரொனால்டோ பிற்பாதியாட்டத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை சிறப்பாக உதைத்தார். ஆனால், பந்து கோல் கம்பத்தில்தான் மோதியது.

ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் அல்-நாசரின் அய்மன் யஹாயா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

தப்பாட்டம் காரணமாக அல்-ஹிலாலின் இரண்டு விளையாட்டாளர்களும் அல்-நாசரின் ஒரு விளையாட்டாளரும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டனர். அப்படியிருந்தும் இரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி ஆட்டத்தின் கூடுதல் நேரத்திலும் தோல்வியடையாமல் பார்த்துக்கொண்டன.

பெனால்டிகளில் 5-4 எனும் கோல் கணக்கில் வென்றது அல்-ஹிலால். இப்பருவம் அக்குழு லீக் விருதையும் கைப்பற்றியிருந்தது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், ஸ்பெயினின் ரியால் மட்ரிட், இத்தாலியின் யுவென்டஸ் ஆகிய மிகப் பிரபலமான குழுக்களில் விளையாடி அசத்தியிருக்கும் ரொனால்டோ, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு அல்-நாசரில் சேர்ந்தார்.

ஆனால் ரொனால்டோ அல்-நாசரில் சேர்ந்த பிறகு அக்குழு இதுவரை கிண்ணம் ஏதும் வெல்லவில்லை. சவூதி அரேபிய கிண்ண இறுதியாட்டம் நிறைவடைந்ததும் திடலில் கண்ணீர் சிந்தினார் ரொனால்டோ.

குறிப்புச் சொற்கள்