கிராண்ட் பிரேரி (அமெரிக்கா): இவ்வாண்டின் ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை வென்றுள்ளது.
முதலில் பந்தடித்த கனடா, ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் போட்டியை ஏற்று நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்களை எடுத்தது அமெரிக்கா.
40 பந்துகளில் 94 ஓட்டங்களை விளாசினார் அமெரிக்காவின் ஏரன் ஜோன்ஸ். அதன் மூலம் உலகளவில் டி20 ஆட்டம் ஒன்றில் 10 அல்லது அதற்கும் அதிகமான சிக்சர்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜோன்ஸ்.
இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் மட்டுமே அந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
ஆட்டத்தில் கனடாவுக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் நிக்கலஸ் கர்ட்டன். அவர் 31 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்தார்.

