பெர்லின்: அண்மையில் ஜெர்மனியின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது.
அதில் அது கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் காற்பந்துக் குழுவில் கூடுதல் வெள்ளைக்கார ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று அது ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் கேள்வி எழுப்பியது.
இதற்கு ஆமாம் என்று 21 விழுக்காட்டினர் தெரிவித்ததாக ஏஆர்டி தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.
இந்த ஆய்வு இனவாதமிக்கது என்று ஜெர்மன் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளரான 36 வயது ஜுலியன் நெகல்ஸ்மன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆய்வு இனவாதமிக்கது. அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும். இனவாதக் கொள்கைகள் காரணமாகப் பாதுகாப்பான நாட்டைத் தேடி பலர் ஐரோப்பாவிலிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார் அவர்.
ஜெர்மன் காற்பந்துக் குழுவில் தற்போது கலப்பின ஆட்டக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் அணித் தலைவர் இல்காய் குண்டோகன், தாக்குதல் ஆட்டக்காரர் லீரோய் சானே ஆகியோர் அடங்குவர்.
ஜூன் மாதத்தில் யூரோ 2024 காற்பந்துப் போட்டியை ஜெர்மனி ஏற்று நடத்துகிறது.