நியூயார்க்: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண ஆட்டத்தில் 119 ஓட்டங்களுக்கு இந்திய அணியை கட்டுப்படுத்திய பிறகு அந்த இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
“தற்போது பாகிஸ்தான் அணியில் உள்ள பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துலக அளவில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். முகமது ரிஸ்வானுக்கு ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லை. இப்திகார் அகமத் எப்படி பந்தடிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார்,” என்று வாசிம் அக்ரம் விமர்சனம் செய்தார்.
“வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் சரியாக ஆடாவிட்டால் பயிற்சியாளர்தான் நீக்கப்படுவார் என்று நினைக்கின்றனர். ஆனால், பயிற்சியாளர்களைத் தக்கவைத்து இந்த ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, முற்றிலும் புதிய அணியை தேர்வு செய்ய வேண்டும்,” என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மற்ற ஆட்டத்தை எப்படி வெல்ல முடியும். பாகிஸ்தான் பந்தடிப்பாளர்கள் படுமோசமான விளையாடியதுதான் தோல்விக்குக் காரணம்,” என்றார் வக்கார் யூனிஸ்.
“இந்த அணியில் எந்த ஒரு பலமும் இல்லை. இரண்டு தொடக்க வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர். மற்றவர்கள் எதற்கும் பயனில்லாதவர்கள். நாம் எதார்த்தத்தை விட்டுத் தொலைவில் இருக்கிறோம்,” என்று பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் வருத்தம் தெரிவித்தார்.