மட்ரிட்: ஸ்பானிய லீக் காற்பந்தாட்டத்தின்போது ரியால் மட்ரிட் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரரான வினிசியஸ் ஜூனியருக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த மூன்று ரசிகர்களுக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று வெலன்சியாவின் மெஸ்டெல்லா விளையாட்டரங்கில் வினிசியசை இழிவுபடுத்தும் வகையில் அந்த மூவரும் வசைபாடினர்.
ஸ்பெயினில் நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் இனவாதக் கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
அந்த மூவருக்கும் எதிராக ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டிக்குத் தலைமை தாங்கும் அமைப்பு காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தம்மை இழிவுபடுத்தியோருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து வினிசியஸ் கருத்து தெரிவித்தார்.
“நான் இனவாதத்தால் பாதிக்கப்பட்டவன் அல்ல. மாறாக, இனவாதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்கு மறக்க முடியாத கெட்ட கனவாக இருக்கிறேன். காற்பந்து ஆட்டத்தில் இனவாதக் கருத்துகள் தெரிவித்தவர்களுக்கு ஸ்பெயினில் முதல் முறையாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல. இது கறுப்பினத்தவர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள வெற்றி,” என்று எக்ஸ் தளத்தில் வினிசியஸ் பதிவிட்டார்.

