நியூயார்க்: டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் கனடாவை பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் தற்போது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பூவா தலையாவை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. அனுபவம் குறைந்த கனடாவின் பந்தடிப்பாளர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சில் திணறினர்.
ஆரோன் ஜான்சன் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். அவர் 52 ஓட்டங்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா 106 ஓட்டங்களை எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தானுக்கு முகம்மது ரிஸ்வான் சிறப்பாக விளையாடினார். அவர் 52 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய பாபர் அசம் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 17.3 ஓவர்களில் 107 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி பொறுத்தே பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும்.